திமுகவின் வெற்றியை பறிக்க அதிமுக சதி! ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

First Published Dec 17, 2017, 5:36 PM IST
Highlights
AIADMK plot to stop the election - Eswaran charge!


காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் படுகொலைக்கு, தமிழக காவல் துறையின் நிலைப்பாடுதான் காரணம் என்றும் ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெறக் கூடாது என்பதால் ஆளுங்கட்சி சதிவேளைகளில் ஈடுபடுவதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். 

ஈஸ்வரன், செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், வெளி மாநிலங்களுக்கு கொள்ளையர்களைப் பிடிக்க செல்லும்போது போலீசார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில்தான் செல்ல வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சென்றிருக்கக் கூடாது.
சொந்த மாநில இன்ஸ்பெக்டர்களையே மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, வெளிமாநில இன்ஸ்பெக்டர்களை எப்படி மதிப்பார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் பங்கேற்கும் விழா என்றால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெரிய கொள்ளையர்களைப் பிடிக்க 5 பேர் கொண்ட போலீசார் செல்வது எப்படி சரியாகும் என்றார்.

200 பேர் கொண்ட சிறப்பு படையுடன் அவர்கள் செல்ல வேண்டும். எந்த மாநிலத்துக்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்று கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி கூறும்போது, பணப்பட்டுவாடா மீண்டும் ஆரம்பித்து விட்டது. கடந்த முறை எந்த காரணத்துக்காக தேர்தலை நிறுத்தினார்களோ? இந்த முறையும் அதே தவறு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதால் ஆளும் அதிமுக அரசு தேர்தலை நிறுத்த, இதுபோன்ற சதி வேளைகளில் ஈடுபடுவதாகவும் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறையும் தேர்தல் ரத்தானால் மக்களுக்கு தேர்தல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும். எனவே தேர்தல் ஆணையம் இனியாவது விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஈஸ்வரன் கூறினார்.

click me!