’கம்முனு இருங்கப்பா... நமக்கு வேட்டி தான் முக்கியம்...’ பதறும் அமைச்சர் ஜெயகுமார்..!

By vinoth kumarFirst Published Jun 10, 2019, 2:45 PM IST
Highlights

அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிமுகவில் ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். 2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும்  நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்’ என ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்திற்கு குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்தார்.

 

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து அதிமுக தலைமையில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும், ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். 

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும். அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும். 

கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம், பொதுவெளியில் கூடாது. ஒற்றைத்தலைமை தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. திமிங்கலங்களை போல் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கலைக்க நினைக்கிறார்கள். அண்ணா கூறியபடி துண்டு என்பது பதவி; வேட்டி என்பது மானம் போன்றது; எங்களுக்கு வேட்டிதான் முக்கியம்" என கூறினார்.  

click me!