மக்களவை தேர்தலில் அதிமுகவில் எம்.பி. சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்து வந்த சத்தியபாமா கட்சியை விட்டு விலகி டிடிவி.தினகரன் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுகவில் எம்.பி. சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்து வந்த சத்தியபாமா கட்சியை விட்டு விலகி டிடிவி.தினகரன் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணியாக பிரிந்த போது, சத்தியபாமா ஓ.பி.எஸ். அணியில் இருந்தார். இந்த முறையும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்காக காத்திருந்தார்.
ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட திருப்பூரில் எம்.எஸ்.ஆனந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனால் சத்தியபாமா ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் நேற்று காலை முதலே அவர் அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. இதனையடுத்து அவரை சமாதானப்படுத்த இரண்டு மூத்த அமைச்சர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து டிடிவி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்தியபாமா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுகவில் இருந்து விலகி விட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. பேஸ்புக்கில் வந்த தகவல் குறித்து, என்னிடம் பலர் விபரம் கேட்டனர். கட்சி தாவும் எண்ணமே எனக்கு கிடையாது. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நான் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக வெளியேறியதாக கூறப்படுவது தவறான தகவல். கட்சி பணியில் முழுமையாக ஈடுபட்டு தான் வருகிறேன் என்றார்.
ஜெயலலிதா, எனக்கு வாய்ப்பு அளித்தார். 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றினேன். தற்போது போட்டியிடும் வேட்பாளருக்கு நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன். இதுபோன்று அவதூறாக, பதிவிட்டால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தியபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.