
சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு தொடங்கியது. இதில் 100 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.
இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
மேலும் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 100 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.