நயினார் நாகேந்திரன் பேச்சை ரசித்து கேட்டவர் தான் அண்ணாமலை.. இப்போது நாடகமாடுகிறார்.. விளாசும் அதிமுக எம்எல்ஏ

By vinoth kumarFirst Published Jan 28, 2022, 1:46 PM IST
Highlights

அண்ணாமலை, எடப்பாடியிடம் பேசி விட்டேன். வருத்தம் தெரிவித்தேன் என்று சொல்லியிருக்கிறார். நயினார் நாகேந்திரன் பேசும்போது அந்த மேடையிலேயே அருகில் இருந்து ரசித்துக் கேட்டவர் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன் பேசும்போது அந்த இடத்தில் ரசித்து கேட்டு விட்டுஅண்ணாமலை மறுநாள் காரணம் சொல்வது ஏற்கத்தக்கது இல்லை என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதிமுகவினர் கொந்தளித்தனர். ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள் என்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் பேச்சு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்;- நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு கிடையாது. நயினார் நாகேந்திரனுக்கே அதில் உடன்பாடு கிடையாது. அவர் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால், வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தார். ஆனால், பேசும்போது அந்த இடத்தில் ரசித்து கேட்டு விட்டு மறுநாள் காரணம் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் அதிமுகவினர் யாரும் ஆண்மையோடு பேசவில்லை என அதிமுகவை குறை சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல, அடுத்தது பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்ற நகைச்சுவையையும் அவர் கூறியிருக்கிறார். 

அண்ணாமலை, எடப்பாடியிடம் பேசி விட்டேன். வருத்தம் தெரிவித்தேன் என்று சொல்லியிருக்கிறார். நயினார் நாகேந்திரன் பேசும்போது அந்த மேடையிலேயே அருகில் இருந்து ரசித்துக் கேட்டவர் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை. பேசும்போது அந்த இடத்தில் ரசித்து கேட்டு விட்டு மறுநாள் காரணம் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. அதிமுக தயவால்தான் பாஜகவினர் 4 பேரும் எம்எல்ஏக்கனாக வெற்றி பெற்றார்கள் என்பது நாட்டுக்கே தெரியும் என ஆவேசமாக அருண்மொழித்தேவன் கூறியுள்ளார். 

click me!