
ஆளுநரும், முதலமைச்சரும் அவரவர் வேலைகளை பார்த்தாலே இங்கு சர்ச்சைகளுக்கு இடம் இருக்காது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக்கூடாது அரசியல்வாதிகளும் ஆன்மீகம் பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில் ஆளுநருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இடையேயான கருத்து மோதல் தீவிரமாக இருந்து வருகிறது. நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தது முதல புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் கூறி வரும் கருத்துக்கள் மாநில அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. இது தமிழகத்தின் அரசியல் களத்தை வெப்பம் நிறைந்ததாகவே வைத்துள்ளது. மறுபுறம் மதுரை ஆதினம் இந்துசமய அறநிலைத்துறை குறித்து விமர்சித்து வருவது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார் அப்போது பேசிய அவர், விஜயகாந்த் மிகவும் நலமுடன் உள்ளார். அதோடு மருத்துவமனைக்கு மாதந்தோறும் பரிசோதனைக்காக செல்வது வழக்கமான ஒன்றுதான்.தேமுதிகவின் உள்கட்சி தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ளது. அதை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தேமுதிகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முனைப்போடு இருக்கிறோம், ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்த் அவர்களின் 70வது பிறந்த நாளும், செப்டம்பர் 14 அன்று கட்சியின் 18ஆம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெற உள்ளது. அதனை எவ்வாறு தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுக செய்த தவறுகளால் தான் இப்போது ஆட்சியை இழந்து வருந்துகிறது. நாங்கள் சொன்னதை அவர்கள் அப்போது சரியாக நேரத்தில் செய்திருந்தால் தற்போது ஆட்சியிலிருந்து இருப்பார்கள். தேமுதிக தான் உண்மையான எதிர்க்கட்சி, மதுரை ஆதினம் ஆதீனங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆன்மீகவாதி அரசியல் பேசக்கூடாது. அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக்கூடாது. அவரவர் வேலையை அவரவர் பார்த்தால் சர்ச்சைகளுக்கு வேலை இருக்காது. இவ்வாறு கூறினார்.