அமைச்சரோட பழைய கதையை அவிழ்த்துவிட்டா அவ்வளவுதான்...! மந்திரியை தெறிக்கவிடும் ஆளும் அதிமுக எம்.எல்.ஏ.

By Vishnu PriyaFirst Published Jan 22, 2019, 4:29 PM IST
Highlights

தோப்பு இப்படி ஒரேடியாய் புயலாய் வீசியிருப்பதில் கடும் கோவத்தில் இருக்கிறார் கருப்பணன். அவரது ரியாக்‌ஷன் எந்தளவுக்கு உஷ்ணமாய் இருக்கப்போகிறதோ தெரியவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளை சுமந்து கொண்டிருக்கும் எடப்பாடியார், உட்கட்சிக்குள் இப்படி சிட்டிங் மினிஸ்டரும், மாஜி மினிஸ்டரும் மோதிக் கொள்வதால் ஏகத்துக்கும் அப்செட்

’இது ராணுவம் போன்ற கட்டுப்பாடான இயக்கம்!’ - அமரர் ஜெயலலிதா கர்வத்தோடு கர்ஜித்த வார்த்தைகள் இவை. ஆனால் இன்றோ கோஷ்டி கோதாவில் ஆல்டைம் வின்னர் காங்கிரஸுக்கே தண்ணி காட்டுகிறது அ.தி.மு.க. 

ஆளுங்கட்சியின் உட்கட்சி பஞ்சாயத்துகளில் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட்....அமைச்சர் கருப்பணனுக்கும், எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்துக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம்தான். அதிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நிகழ்வுக்காக தன் தொகுதியில் தோப்புவை பேசுவதற்கு தலைமை அறிவிக்க, அதை கருப்பணன் மாற்றிவிட, சினந்தெழுந்த வெங்கடாசலமோ வெச்சு செய்யத் துவங்கிவிட்டார் அமைச்சரை. 

அதிலும் தோப்பின் லேட்டஸ்ட் பேட்டி ச்சும்மா தீப்பிடிச்சு ஜிகுஜிகுன்னு எரியுதுங்கோவ்! அதில் சிலவற்றை அள்ளிப்போடுறோம் கவனிங்க... “தன்னோட தொகுதியான பவானியில நான் கெளரவமா வந்து உட்கார்ந்து விழாவை சிறப்பிச்சுட கூடாதுன்னு பொறாமையில அதை திருத்தி எழுதிட்டார் கருப்பணன். பவானியில மட்டுமா மைக் இருக்குது, ம்இனி கிடைக்கிற இடத்திலெல்லாம் அவரோட அதர்மங்களை விலாவாரியா விளாசித் தள்ளுவேன். 

என்னோட பெருந்துறை தொகுதியில நான் கஷ்டப்பட்டு கொண்டு வந்த திட்டங்களை என்னமோ தான் கொண்டு வந்தா மாதிரி தம்பட்டம் அடிக்கிறார். மொட்ட பெட்டிஷன் போடுறா மாதிரி, மொட்டையா ‘பெருந்துறை அ.தி.மு.க.’ன்னு போட்டு போஸ்டரடிக்க வைக்கிறார் சில கைக்கூலிகளுக்கு காசை அள்ளிக் கொடுத்து. இதெல்லாம் கீழ்த்தரமான அரசியல்! அவருக்கு நான் மறுபடியும் அமைச்சராகி வந்து உட்கார்ந்துடுவேனோன்னு பயம், அந்த படபடப்பால் கூட இப்படி என்னை சீண்டி, அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்க்கலாம்.  

எங்க கட்சியைப் பொறுத்தவரைக்கும் தகுதியிருக்கும் எளிய தொண்டனும் ஏற்றமிகுந்த பதவிக்கும் வரலாம். அமைச்சர் பதவியொன்னும் ஐந்து வருஷமும் கருப்பணனுக்குதான்னு பட்டயம் போட்டுக் கொடுத்துடலையே. எடப்பாடியார் நினைச்சால் எந்த நொடியிலும் என்னை அமைச்சராக்கிடுவார். அதை செங்கோட்டையனாலேயோ இல்லை யாராலும் தடுக்க முடியாது. 

அழுத்தமா ஒண்ணு சொல்ல விரும்புறேன். அவருக்கு பதிலடி தரவேண்டாம், வயதானவர், அய்யோ பாவமுன்னு நினைச்சு அமைதியா இருந்தேன். இனியும் என் தொகுதியிலிருந்து என்னை ஒதுக்கி வைக்கிறது, என்னை புறக்கணிக்குறது, என்ன அரசியலில் டம்மியாக்க நினைக்கிறது மாதிரியான வேலைகளை கருப்பணன் இனியும் செய்தால் நான் அவருடைய பழைய விஷயங்களை, விவகாரங்களைக் கிளறுவேன். அப்புறம் என் மேலே சங்கடப்பட்டுக்க கூடாது யாரும்.” என்று வெளுத்தெடுத்திருக்கிறார். 

தோப்பு இப்படி ஒரேடியாய் புயலாய் வீசியிருப்பதில் கடும் கோவத்தில் இருக்கிறார் கருப்பணன். அவரது ரியாக்‌ஷன் எந்தளவுக்கு உஷ்ணமாய் இருக்கப்போகிறதோ தெரியவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளை சுமந்து கொண்டிருக்கும் எடப்பாடியார், உட்கட்சிக்குள் இப்படி சிட்டிங் மினிஸ்டரும், மாஜி மினிஸ்டரும் மோதிக் கொள்வதால் ஏகத்துக்கும் அப்செட்!

click me!