
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று கூட்டணி கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இரவு 9.30 மணிக்கு பாஜக தரப்பில் அதிமுக தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்காக தமிழக பாஜக தலைவர் முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பாஜக நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே.மணி , புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் அதிமுக தலைவர்களோடு தொகுதிகள் இறுதி செய்வதற்காக 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக போட்டியிடும் தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது என்றும் காலை அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். மேலும் பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தாகவும், நாங்கள் கேட்ட தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக தலைவர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் அதிமுக அலுவலகத்திலிருந்து புறப்பட்டனர். இன்று மாலைக்குள் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் என தகவல்கள் கிடைக்கின்றன.