
தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசு நீடிக்குமா நீடிக்காதா என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. யார் என்ன சொன்னாலும் அதிமுக அரசே தொடர்ந்து நீடிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் வேளாண்மை உற்பதியாளர்கள் விற்பனை சங்க ரேசன் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது:
தமிழக அரசின் நீண்ட நாள் கனவான ஸ்மார்ட் கார்டு திட்டம் தற்பொழுது நிறைவேறியுள்ளது.
இத்திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் யாரையும் ஏமாற்ற முடியாது, ஏமாறவும் முடியாது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற போது அரசு சார்பில் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தேன்.
இதன் மூலம் 3½ லட்சம் மாணவ மாணவிகள் தற்பொழுது பயன் பெற்றுள்ளனர்.
இந்த அரசு நீடிக்குமா நீடிக்காதா என்ற கேள்வி பலரிடம் எழுகிறது. அவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை, அதுபற்றி கவலையில்லை.
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, இந்த அரசு நிச்சயமாக 4¼ ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். இது உறுதி.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.