
விவசாயிகளின் போராட்டங்களை பாஜக கொச்சை படுத்துவதா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தியில் தமிழக விவசாயிகள் 34 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை மத்திய அரசு எவ்வித பேச்சுவார்த்தைக்கும் முன்வராமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதனிடையே பாஜக தலைவர்களும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொடுமையான வறட்சியின் காரணமாக, விவசாயிகள் நிவாரணம் கோரியும், கடன் தள்ளுபடி செய்ய கோரியும் போராடி வருகின்றார்கள்.
விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராடி வருகின்றனர்.
போராட்டங்களில் குறிப்பிடும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.
விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைபடுத்தும் விதமாக பாஜ தலைவர்கள் பேசிவருவது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக போராடிய திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட ஏழுபேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.