உப்பு சப்பு இல்லாத அதிமுக பொதுக்குழு... 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

By vinoth kumarFirst Published Nov 24, 2019, 12:50 PM IST
Highlights

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டில் மறைந்தார். அவர் மறைந்த பிறகு டிசம்பர் 29-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிப்பு, சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்பு, சசிகலா சிறைக்கு சென்றது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது, என அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. இதனையடுத்து 2017 செப்டம்பர் 12ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. மேலும், புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம்;- 

* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு. 

* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி தெரிவித்து தீர்மானம்.

* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு தொண்டர்கள் உழைத்திட வேண்டும்.

* அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு.

* நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.

* அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.

* தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

* கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு.

* இலங்கை தமிழர்களின் சமஉரிமையை உறுதி செய்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை.

* மருத்துவ பட்ட மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

click me!