அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் ஒற்றை தலைமை தீர்மானம்.. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.?

By Asianet TamilFirst Published Jun 18, 2022, 9:47 PM IST
Highlights

ஒற்றை தலைமை  குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்தில் கூறியதாகவும் தெரிகிறது. 

பொதுக்குழு தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்து எதுவும் இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூடுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்பு மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறது. பிரச்சனைக்குக் காரணம் ஜெயக்குமார்தான் என்று அவர் மீது தங்களுடைய கோபத்தை காட்டி வருகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதற்கிடையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் தனித்தனியாகச் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஒற்றைத் தலைமை விஷயத்தை சுமூகமாக முடிக்க அதிமுக மூத்த தலைவர்கள் தம்பித்துரை, செல்லூர் ராஜூ போன்றோர் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 

இன்னொரு புறம் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே சமாதான முயற்சிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.  ஆனால், எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை.  இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ப. வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, வைத்திலிங்கம், சிவி சண்முகம் ,வைகைச்செல்வன் ,ஆர். பி. உதயகுமார், ஜேசிடி பிரபாகர், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஒற்றை தலைமை  குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்தில் கூறியதாகவும் தெரிகிறது. ஏற்கனவே வைத்திலிங்கம், “ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி செய்தால் கட்சி அழிவுப் பாதைக்கு செல்லும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டத்தில் வைத்திலிங்கம் பேச்சுக்கு எதிராக யாரும் பேசவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் ஜேசிடி பிரபகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுக்குழு தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்து எதுவும் இல்லை. அதுபற்றி விவாதிக்கவும் இல்லை. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.” என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். 

click me!