அதிமுக- தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதிசெய்யப்படுகிறது..? பிடிவாதமாக இருந்து சாதித்த பிரேமலதா..?

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2021, 11:34 AM IST
Highlights

ஆனால் தேமுதிகவுக்கு 12 முதல் 15 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியுமே தவிர 23 தொகுதிகள்வரை ஒதுக்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என தேமுதிக அதிமுகவை மிரட்டியது. 

அதிமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் சென்னையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்த உள்ளது. 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வழக்கம்போல முன்கூட்டியே பேச்சுவார்த்தையை முடித்து 23 தொகுதிகளை பெற்றுவிட்டன. அதைத்தொடர்ந்து பாஜகவிடம் அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையிலும் இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்திலேயே வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெறப் போவதாகவும்,  தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து  வலியுறுத்தி வந்தார். பாமகவை போலவே தங்களுக்கும் அதிமுக கூட்டணியில்  23 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியது. 

ஆனால் தேமுதிகவுக்கு 12 முதல் 15 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியுமே தவிர 23 தொகுதிகள்வரை ஒதுக்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என தேமுதிக அதிமுகவை மிரட்டியது. பின்னர் இறங்கி வந்த அதிமுக, தேமுதிகவுடன் 3வது கட்ட பேச்சுவார்தையில் நேற்று ஈடுபட்டது  அதிலும் இழுபறி நீடித்தது. இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே புதன்கிழமை (இன்று) நடைபெறும் 4வது கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி  செய்யப்படும் என கூறப்படுகிறது.  குறிப்பாக விருதுநகர், விருதாச்சலம், ராதாபுரம், மேட்டூர், மயிலாடுதுறை,  பண்ருட்டி, பேராவூரணி, ஆம்பூர், சேந்தமங்கலம், சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி,  திட்டக்குடி,  மதுரை மத்தியம், ஆலந்தூர்,  விருகம்பாக்கம்,  எழும்பூர், அம்பத்தூர், ரிஷிவந்தியம்,  ஈரோடு கிழக்கு, சூலூர் ஆகிய 25 தொகுதிகளை தேமுதிக கொருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகண-தேமுதிக இடையே இன்று 4 வது கட்ட  பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.  

 

click me!