மோடியின் கூட்டத்தை நிராகரித்த அதிமுக... பாஜகவுக்கு எதிர்ப்பு..?

By Thiraviaraj RMFirst Published Jun 19, 2019, 5:24 PM IST
Highlights

பிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த  அதிமுக பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

பிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த  அதிமுக பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா, சிரோமணி அகாலி தளம் சுக்பீர் சிங் பாதல், பிஜூ ஜனதா தளம் நவீன் பட்நாயக், மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் டெல்லி சென்றனர். எனினும், கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வது எப்படி என குழப்பம் ஏற்பட்டு உள்ளது. 

இதனால், கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. இந்தக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் தங்கி உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார். பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வந்த அதிமுக தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது.   

click me!