முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Oct 7, 2020, 11:24 AM IST
Highlights

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் வழங்கி துணை முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். 

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் வழங்கி துணை முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். 

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கடந்த 28ம் தேதி நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் முதல்வர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால் ஆளும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், அக்டோபர் 7ம் தேதியான இன்று காலை 9.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். கூட்டம் ஆரம்பித்தவுடன் பேசிய கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் நல்லாசியோடு வரலாற்று சிறப்பு மிக்க நன்நாளில் 2021 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளரை அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியும் கட்சியும் தொண்டர்கள் கையில்தான் இருக்க வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் கனவு தற்போது நனவாகிக்கொண்டிருக்கிறது. அந்த வழியில் நாம் வெகு சிறப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வழிகாட்டு குழுவினரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.மேலும், முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். 

1991ம் ஆண்டுக்கு பிறகு புதிய முதல்வர் வேட்பாளரை அறிவித்து அதிமுக தேர்தலை சந்திக்கிறது. 1991ம் ஆண்டில் இருந்து  2016ம் ஆண்டு தேர்தல் வரை முதல்வர் வேட்பாளராக ஜெயலிலதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!