பேசிக்கொண்டிருந்த போதே தேர்தல் அலுவலர் கன்னத்தில் பளார் விட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்..!

By vinoth kumarFirst Published Sep 26, 2021, 7:33 PM IST
Highlights

அதிமுக வேட்பாளர் சலேத் மேரி தனது வேட்பு மனுவை திரும்ப பெறாத நிலையில் திமுக போட்டியின்றி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்கலாம் என்று அதிமுகவினர் தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரை அதிமுக ஒன்றிய செயலாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 22ம் தேதி மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நடைபெற்றது. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு செப்டம்பர் 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13,957 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 2,530 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. மீதியிருந்த 487 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அலமேலு ஆறுமுகம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அனைவரும் வாபஸ் பெற்ற நிலையில், அலமேலு ஆறுமுகம் போட்டியின்றி தேர்வானதாக அறிவித்து அதற்கான சான்றிதழை அவரிடம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி வழங்கினார்.

அதிமுக வேட்பாளர் சலேத் மேரி தனது வேட்பு மனுவை திரும்ப பெறாத நிலையில் திமுக போட்டியின்றி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்கலாம் என்று அதிமுகவினர் தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், திடீரென தேர்தல் அலுவலர் சாமிதுரையை கன்னத்தில் அறைந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!