Sasikala: சளைக்காத சசிகலா... அதிமுகவில் அமமுக இணைப்பு..? டி.டி.வி.தினகரன் எடுத்த உறுதி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2021, 11:39 AM IST
Highlights

நான் தான் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் சொல்வதை சரியாக செய்தாலே அதிமுகவை எளிதாக கைப்பற்றிவிடலாம்

கையை விட்டுப்போன அதிமுகவை கைப்பற்றியே தீர வேண்டும் என்கிற வேட்கையில் இருக்கிறார் சசிகலா. அதற்காக அவர் எந்த அஸ்திரத்தையும் தொடுக்கத் தயாராகி வருகிறார்.

ஒரு தரப்பு சசிகலா வருகைக்கு மேலோட்டமாக ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிமுக வலுவாக இருக்க வேண்டுமானால் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை முதல் வெளியில் இருந்து பலரும் எடப்பாடி தரப்பு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம், வேளாங்கன்னியில் அமமுக சிறுபான்மையினர் பிரிவு அணியின் சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பாதிரியார்கள் வழங்கிய குழந்தை இயேசுவை குடிலில் வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அமமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய டி.டி.வி. தினகரன், “மதம், இனம், ஜாதியின் பெயரால் அமைதி பூங்காவாக உள்ள நமது மாநிலத்தை, நமது நாட்டை அரசியல் காரணங்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். சிலர் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் காட்டிக்கொண்டு இன்று ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களின் செயல்பாடுகள் என்னவென்று மக்களுக்குத் தெரியும்.

 கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக விவேக்கை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். கொடநாடு கொலை வழக்கு குறித்து, விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரிடம் தகவல்கள் ஏதாவது இருக்கலாம் என்பதால் விசாரணை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். இதை ஒன்றும் நாம் வித்தியாசமாக பார்க்க தேவையில்லை.

 சிலநாட்களுக்கு முன்பு அதிமுக, பெட்ரோல் - டீசல் விலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினார்கள். அதில் மத்திய அரசைக் கண்டித்து ஒரு முழக்கம்கூட எழுப்பவில்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால் மத்திய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர். இதைத்தான் எதிர்க்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள்தான் இதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

“வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக - அதிமுக இணைப்பு இருக்குமா” என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “வாய்ப்பே இல்ல” என்பதுபோல தலையை ஆட்டி பதில்கூறினார்.

முன்னதாக டி.டி.வி. தினகரனை அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தினகரனின் அமமுக கட்சி இருப்பதால் அதிமுகவுக்குள் எளிதாக நுழையமுடியவில்லை. ஆகையால் அந்த கட்சியை கலைக்கும் அறிவிப்பை தினகரன் வெளியிட வேண்டும் என சசிகலா கூறியிருந்தாராம். ஆனால் அதனை தினகரன் ஏற்க மறுத்ததால் அதிருப்தியில் இருந்தார் சசிகலா என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென தினகரனை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் சசிகலா.

இதில் அமமுக கலைப்பு, அதிமுகவில் இணைவது குறித்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும். இதுதான் சரியான நேரம். நான் தான் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் சொல்வதை சரியாக செய்தாலே அதிமுகவை எளிதாக கைப்பற்றிவிடலாம்’ என்று டிடிவி தினகரனுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் சசிகலா. ஆனால், தற்போது அதிமுக-அமமுக இணைப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.   

click me!