விரைவில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெற்று கட்டுமானப் பணிகளை துவக்கியதே சாதனை: அதிமுக அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2020, 4:06 PM IST
Highlights

வரலாற்று சாதனையாக மாண்புமிகு அம்மாவின் அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரக தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1,40,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் தலைமையில் இன்று (29.8.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக அவர் உரையாற்றினார், அப்போது அவர் பேசியதாவது:

இக்கொரானா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 1,53,576 சுய உதவிக் குழுக்களுக்கு, 5,934 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67,354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும்கடனாக வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் (CORUS)செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனது தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்கள் நடத்தி, உடனுக்கு உடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அறிவுறுத்தியதினால்,மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிக அளவில், அதாவது சுமார் 7,518 கோடி ரூபாய்க்கான ஒப்புதலினை பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்து, மக்களை பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாத்தன எனவும், வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புர, ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்படி கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாம் முன்னரே திட்ட மிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு
4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விரைவில் பருவமழையும் துவங்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைநீர்வடிகால் பகுதிகளை தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிந்து செல்ல தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால், டெங்கு கொசு உருவாக வாய்ப்பு ஏற்படும். டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான். வரலாற்று சாதனையாக மாண்புமிகு அம்மாவின் அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது. அப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்து, பணியினை மேலும் துரிதப்படுத்த வேண்டும். அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்கள், அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.  

 

click me!