எத்தனை கோடி துட்டு போனாலும் எட்டை விடக்கூடாது... அதிமுகவின் அதிரடி அரசியல்!

By Asianet TamilFirst Published Jan 23, 2019, 12:52 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமாக இருக்கப்போகிறது. இந்தத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் குறைவாக அதிமுக வெற்றி பெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சிக்கல் வந்துவிடும். இதை ஆளும் தரப்பும் உணர்ந்தே இருக்கிறது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த ஆளும் அதிமுக முடிவு செய்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தற்போதைய நிலையில் 110 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு உள்ளது. பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை. வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து காலியாக உள்ள 21 சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமாக இருக்கப்போகிறது. இந்தத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் குறைவாக அதிமுக வெற்றி பெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சிக்கல் வந்துவிடும். இதை ஆளும் தரப்பும் உணர்ந்தே இருக்கிறது. ஏற்கனவே நடந்த கட்சிக் கூட்டத்தில்கூட ‘8 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டிய கட்டாயம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாகப் பேசினார்.

 

இதன் வெளிப்பாடாக இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளை நடத்தவும், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஆளும் தரப்பு முடிவு செய்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘காலியாக உள்ள விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் காலியாக உள்ள தொகுதிகளில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக  இந்தத் தொகுதிகளுக்கு அடிக்கடி சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அமைச்சர்கள் மட்டுமல்லாமல், முதல்வரும் இந்தத் தொகுதிகளுக்கு செல்ல உத்தேசித்திருக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு காலி தொகுதிகளில் இனி அமைச்சர்களை அடிக்கடிப் பார்க்கலாம்.

click me!