பட்டைய கிளப்பிய அகமது பட்டேல்….குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சூழ்ச்சியை முறியடித்து வெற்றி…

First Published Aug 9, 2017, 6:22 AM IST
Highlights
ahamed patel win in gujarath rajyasaba election


பரபரப்பான சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.

குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில்  ராஜினாமா செய்து பாஜகவில்  இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  6 பேர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பாஜக  தலைவரிடம் காண்பித்தனர்.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்களது கட்சி எம்எல்ஏக்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் குவிந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வாக்குப்பதிவின் முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்ததையடுத்து மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவித்தது.

இதையடுத்து  நள்ளிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் தனக்கு தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக  தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ராணி ஆகியோரும்  வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் கட்சியிலு இருந்து ராஜினாமா செய்து அகமது பட்டேலுக்கு நெருக்கடி கொடுத்து  பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜ்புட்டுக்கு 38 வாக்குகள் கிடைத்தன.. 

 

click me!