பள்ளிப்பிள்ளைகளுக்காக கையேந்திய வள்ளல் எம்.ஜி.ஆர்: தம் பிள்ளைகளுக்காக பதவிப்பட்டியலோடு சென்ற தமிழின தலைவர்..!

By Thiraviaraj RMFirst Published Aug 31, 2020, 4:32 PM IST
Highlights

வாரி வாரிக் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரத்தவர், பிள்ளைகளின் அரிசிக்காக கையேந்தினார். அதுதான் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் ஒரு சரித்திரம்.

’ஒரு கை மட்டும் தட்டினா ஓசை வராது; ரெண்டு கையும் சேரும் போதுதான் சத்தம் வரும்..’ எளியவருக்கும் தெரிந்த உண்மை. மக்களின் தலைவர் ஆயிற்றே.. எம்.ஜி,ஆர். அவருக்கு விளங்காமல் இருக்குமா..? 1977 முதல் 1987 வரை, தான் முதல்வர் பொறுப்பில் இருந்த பத்து ஆண்டுகளில், எம்.ஜி.ஆர். பின்பற்றிய மிக முக்கியமான அரசியல் கோட்பாடு – மத்திய அரசுடன் இணக்கமான உறவு.
 
எம்.ஜி.ஆர். போன்ற, மக்கள் நலனை முன் நிறுத்துகிற தலைவர்கள், யாரோடும் சண்டை இடுவதை விட, சில சமாதானங்களை (compromises) மனமுவந்து ஏற்றுக் கொள்வதையே விரும்புகிறார்கள். அடுக்கடுக்காய் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்த முதல்வருக்கு, அவற்றை நிறைவேற்றுவதற்கு, நிதியுதவி தேவைப்பட்டது. இதற்கு மத்திய அரசுடன் சுமுகமான உறவு இருந்தாக வேண்டும். மத்திய அரசுடன் மோதிக் கொண்டு ஒரு மாவீரனாக வேடம் கட்டுவதா..? அல்லது, யதார்த்தம் அறிந்து, கொஞ்சம் விட்டுக் கொடுத்து, மாநிலத்துக்குத் தேவையான நிதிகளைக்கொண்டு வருவதா..? 

தன் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. திரையில் நல்லதுக்காகப் போராடுகிற தலைவராக இருந்த எம்.ஜி.ஆர்., தனது அரசியல் பயணம் முழுவதிலும், மக்கள் சேவகனாகவே தன்னை நிறுத்திக் கொண்டார். ’தில்லிக்கு எதிராகப் போர்’என்றெல்லாம் பேசி, மக்களிடம் தனது பிம்பத்தை உயர்த்திக் காண்பித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். எண்ணியதே இல்லை. காரணம், தன்னுடைய ‘இமேஜ்’என்று தனியே எதுவும் இல்லை; அடித்தட்டு மக்களுக்குத் தான் ஆற்றுகிற பணிகள்தாம் தனது அடையாளம் என்று உறுதியாக நம்பினார்.
 
’திட்டமிட்டுக் கட்டப்பட்ட பிம்பம்’என்று எம்.ஜி.ஆர். பற்றி, அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். உண்மைதான். மக்களுக்காகத் தெளிவாக திட்டமிட்டார்; அவர்களுக்கு வேண்டியதைத் தருவதில் ஒவ்வொரு கல்லாகக் கட்டினார். இரண்டிலும் முழு கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். இன்றும் உலக நாடுகள் அனைத்தும் வியந்து பாராட்டுகிற சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக இருந்தார். ஆனால் அத்தனை பெரிய திட்டத்துக்கு நிதி ஆதாரம், பொருளுதவி வேண்டுமே.. யாரிடம் கேட்பது..? அப்படியே யாரையாவது கேட்டு அவர் கொடுத்தாலும் அது எத்தனை நாட்களுக்குத் தாக்கு பிடிக்கும்..? 

இந்தத் திட்டம் நிரந்தரமானதாக இருத்தல் வேண்டும்; சில மாதங்கள் / ஆண்டுகள் மட்டும் நடைபெற்று நின்றுபோய் விடக் கூடாது. காரணம், இது ஓட்டுக்காக செய்யப்படும் அற்ப அரசியல் நாடகம் அல்ல. பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்குகிற சமூக நலத் திட்டம். இந்தத் திட்டம் வெற்றி அடைய வேண்டும் எனில், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது –மத்திய அரசு தன்னுடைய தொகுப்பில் இருந்து, அரிசி வழங்க வேண்டும். தில்லி சென்று யாசிப்பதற்கு, சற்றும் யோசிக்கவில்லை எம்.ஜி.ஆர். இந்தியத் தலைநகருக்குக் கிளம்பி விட்டார்.
 
‘கேட்டுப் பார்ப்போம்.. தமிழ்நாட்டுக் குழந்தைகளின் நன்மைக்காக யாரிடமும் கையேந்தத் தயார். இதில் என்ன கௌரவக் குறைச்சல் இருக்கிறது..?’
தில்லி வந்த தலைவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. அப்போது மத்திய உணவுச் செயலளராக (Food Secretary) இருந்தவர் ஒரு தமிழர். சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிப் பள்ளியில் படித்தவர்; பள்ளி நாட்களில், 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து தமிழ்த் தென்றல் திருவிக அவர்களால் பாராட்டப் பட்டவர்.
 
அவர்தான் தற்போது சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் பெரியவர் திரு பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ் (94 வயது) அவர்கள். நேரடியாக, ஜவஹர்லால் நேரு, லால்பகதூர்சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களிடம் பணியாற்றிய பேறு கொண்ட ஒரே ஐ.ஏ.எஸ். அதிகாரியான பி.எஸ்.ஆர். அதன் பிறகு மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியச் சென்று விட்டார். அதனால் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதே பலருக்கும் தெரியாமல் போய் விட்டது. 

தமிழக முதல்வர் அவரை சந்திக்க விரும்புவதாகவும், அதற்காக முறைப்படி நேரம் ஒதுக்குவதற்காவும் பி.எஸ்.ஆரிடம் பேசினார்கள். செய்தி அறிந்த பி.எஸ்.ஆர். மாண்புமிகு தமிழக முதல்வரைத் தானே வந்து சந்திப்பதாகச் சொல்லி உடனடியாகக் கிளம்பிப் போனார். ஒரு நிமிடம் கூட வீணாக்கவில்லை எம்.ஜி.ஆர். எடுத்த மாத்திரத்திலேயே, ‘எங்க புள்ளைங்க படிக்கணும்... பலவீனமா இருந்தா படிக்க முடியும்..? அவங்களுக்கு நல்ல சாப்பாடு போடணும்.. அதுக்கு, நீங்க அரிசி குடுத்தாதான் முடியும். ஒரு முதல் அமைச்சரா கேட்கலை… ஒரு சாதாரணக் குடிமகனா கேட்கறேன்.. நீங்க மனசு வச்சா முடியும்..’
எம்.ஜி.ஆர். பேச்சில் இருந்த கனிவும் தெளிவும், பி.எஸ்.ஆரை மிகவும் கவர்ந்தன.

‘சிறுது நேரம் பொறுங்கள். வருகிறேன்..’என்று சொல்லிச் சென்றார்.  சில மணி நேரங்களில் மீண்டும் வந்தார் –‘மாண்புமிகு மத்திய உணவு அமைச்சர் ஒப்புதல் தந்து விட்டார்கள்..!’ இது தொடர்பாக பெரியவர் திரு பி.எஸ்.ஆர். அவர்கள் சொல்லும் மற்றொரு செய்தி, நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்லும். ‘ஒவ்வொரு முறை எம்.ஜி.ஆர். தில்லிக்கு வரும் போதும், சில வினாடி நேரமாவது, சந்தித்துக் கொள்வோம். அப்போது எல்லாம் தவறாமல், தனது ஜிப்பா பாக்கெட்டில் இருந்து இரண்டு அரிசிப் பொட்டலங்களை எடுத்துத் தருவார். அந்த இரண்டுமே ஏதோ ஒரு நோட்டு அல்லது நாளிதழில் இருந்து கிழித்த ஒரு தாளாக இருக்கும்.
 
அதைத் தனது சட்டையில் வைத்துக் கொண்டு வருவார். என்னிடம் கொடுத்து விட்டுச் சொல்லுவார் – ‘இதோ பாருங்க… இந்த ரகம் வேண்டாம்.. இந்த அரிசி எவ்வளவு தரமா இருக்குது பாருங்க… இதையே குடுக்க சொல்லுங்க…’எந்த அளவுக்கு இந்தத் திட்டத்தின் மீது உண்மையான நாட்டம் இருந்தால், ஒரு மாநில முதல் அமைச்சர், தில்லிக்கு வருகிற போது, கிழிந்த தாளில் அரிசியைப் பொட்டலம் கட்டி கொண்டு வந்து காட்டுவார்..? அது மட்டும் அல்ல. அவர் நினைத்து இருந்தால் நேரடியாக, பிரதம மந்திரியிடமே உதவி கேட்டு இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர். அணுகுமுறை அப்படி இருந்ததே இல்லை. துறைச் செயலாளர், துறை அமைச்சர், பிறகுதான் பிரதமர் என்று முறைப்படி செயல்பட்ட தலைவர் அவர்.
 
ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். தவறாகக் கொள்ள வேண்டாம். இலங்கை முள்ளி வாய்க்கால் பகுதியில், எவருடைய மனதையும் பதற வைக்கும் இனப் படுகொலை. ஆயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதே சமயத்தில் இங்கே ஒரு தலைவர், தில்லி சென்று, அங்கேயே தங்கி, ‘தம் மக்கள்’கேட்கும் பதவிகளை, பிரதமருடன் ‘போராடி’பெற்றுத் தந்து ‘வெற்றி’யுடன் திரும்பியதாக செய்தித் தாள்களில் பார்த்தோம். எம்.ஜி.ஆரோ, தனது சட்டைப் பையில் அரிசிப் பொட்டலங்கள் வைத்துக் கொண்டு தில்லியில் செயலாளரைச் சந்தித்து, தமிழ் மக்களுக்காக, பள்ளிக் குழந்தைகளுக்காக முறையிடுகிறார்.

 

வாரி வாரிக் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரத்தவர், பிள்ளைகளின் அரிசிக்காக கையேந்தினார். அதுதான் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் ஒரு சரித்திரம்.
அதிமுகவின் ஆணிவேர் –எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரின் மனித நேயம். அது என்றைக்கும் ஆழ ஆழ பரவிக் கொண்டேதான் இருக்கும். ஆணிவேரின் வலிமையில் ஆலமரமாக வளர்ந்தது அதிமுக. 1987 டிசம்பர் 24. வள்ளலை அழைத்துக் கொண்டது வானுலகம். அடுத்து வந்தார் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு – அடுத்த சுமார் 30 ஆண்டுகள் – தமிழக அரசியலின் அற்புத அத்தியாயம். ‘இப்படி ஒரு தலைமையா..?’என்று இன்றளவும் இந்திய நாடே வியந்து வியந்து கேட்கிறது. வந்தார் ஜெயலலிதா! 

(வளரும்..)

கட்டுரையாளர்:-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.  

click me!