கூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்..? தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்...அதிமுகவில் உருவாகும் புது யோசனை?

By Asianet TamilFirst Published Nov 21, 2019, 6:54 AM IST
Highlights

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றிக்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் சொந்தம் கொண்டாடின. இந்தக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கேட்கத் திட்டமிட்டுள்ளன. இதேபோல பாஜகவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பது என்ற கருத்தை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்வைத்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலில் எல்லோரும் தனித்து நின்று தங்களுடைய பலத்தை நிருபீப்போமா என்று அதிமுக கூட்டணி கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டதையடுத்து மற்ற கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெறுவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் மேயர் சீட்டும் கேட்க திட்டமிட்டுள்ளன. இதைத் தவிர்க்கும் வகையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் அவசர சட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்துள்ளது.

 
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என்று அதிரடி கருத்தை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுபற்றி வத்திராயிருப்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி, “ உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளுமே தனித்து நிற்க வேண்டும். யாருக்கு உண்மையில் பலம் இருக்கு எனப் பார்த்துவிடலாம். அதன் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில்கூட கூட்டணி வைத்து கொள்ளலாம். 


ஏன்னா, யாருக்கு என்ன பலம் என்பது தெரியாமலேயே, என்னால்தான் ஆட்சி வந்தது, எம்.பி., எம்.எல்.ஏ., ஜெயித்தார்கள் என்று பேசுகிறார்கள். தனித்து நின்று பலம் தெரிந்தால், இப்படி பேசுவதற்கு இடமில்லாமல் போய்விடும். என்னுடைய கருத்தை பொதுக் கருத்தாக எடுத்துகொண்டு மு.க. ஸ்டாலினும், எல்லோருமே உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்போம். யார் வெற்றி பெறுகிறோம் என்பதை பார்த்துவிடுவோம். அதிமுக எதற்கும் தயாராகவே உள்ளது” என்று அதிரடியாகப் பேசினார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றிக்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் சொந்தம் கொண்டாடின. இந்தக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கேட்கத் திட்டமிட்டுள்ளன. இதேபோல பாஜகவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பது என்ற கருத்தை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்வைத்துள்ளார். அண்மைக் காலமாக ராஜேந்திர பாலாஜி எந்தக் கருத்தை முன்வைத்தாலும், அதுபற்றி அதிமுக தலைமை எதுவும் சொல்வதில்லை. எனவே, அவருடைய இந்தக் கருத்தை அதிமுக தலைமையின் ஆசியோடு தெரிவித்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

click me!