
இரட்டை இலைச் சின்னம் குறித்த விசாரணை முடிந்துவிட்டதையடுத்து இது தொடர்பாக தீர்ப்பு, இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என, தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலாவுக்குஎதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் 11 எம்எல்ஏக்களுடன் அதிமுகவில் இருந்து வெளியேறிய அவர்இ தாங்கள் தான் உண்மையாக அதிமுக என்றும், இரட்டை இலைச்சின்னம் தங்களுக்குத்தான் என்றும் போர்க் கொடி உயர்த்தினார்.
இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் சசிகலா மற்றும் ஒபிஎஸ் அணிகளுக்கு கிடைக்காமல் முடக்கி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு தனது தர்மயுத்தத்தை முடித்துக் கொண்ட ஓபிஎஸ் இபிஎஸ் அணியுடன் இணைந்தார்.
அதே நேரத்தில் இந்த இருவரின் இணைப்பு டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கியது. இப்போது இந்த இரு அணிகளுக்கும் இடையே தான் போட்டியே !! யாருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது என இப்போது தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது.
இந்நிலையில்தான் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உறுதியாக உத்தரவிட்டுள்ளது.
இதனால் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனையை , மேலும் மேலும் தள்ளிப்போட முடியாத சூழ்நிலை, தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகள் சார்பிலும் லட்சக்கணக்கில் ஆவணங்களை குவித்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி, வாரமொரு முறை, வழக்கறிஞர்கள் கூடி, தேர்தல் ஆணையத்தில் நடத்திய வாதங்கள் முடிந்து விட்டன.
இறுதி விசாரணை நாளில், எதுவும் கூறாமல், தீர்ப்பை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம், தற்போது, அதற்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தள பிரச்னையில், தேர்தல் ஆணையம், சமீபத்தில் அளித்த தீர்ப்புதான், இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
‛பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் யாருக்கு உள்ளனரோ, அவர்களுக்கே கொடியும் சின்னமும்' என்ற நடைமுறையை, பல ஆண்டுகளாக தேர்தல்ஆணையம் பின்பற்றி வருவதன் அடிப்படையில், நிதிஷ் குமாருக்குசாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக பிரச்சனை அப்படி இல்லை. கடந்த டிசம்பர் மாதம் சசிகலாதான் பொதுச்செயலர் என கூறி, மதுசூதனன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என, பொதுக்குழுவில், எல்லாரும் கையெழுத்திட்டு, தேர்தல்ஆணையத்திற்கு பிரமாண பத்திரங்கள் அனுப்பியிருந்தனர்.
பின்னர் சசிகலாவிடம் சண்மைபோட்டு பிரிந்து சென்ற ஓபிஎஸ் மார்ச் மாதத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று இரண்டு லட்சம் பிரமாண பத்திரங்களை அனுப்பினர்.
அப்போது சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பழனிசாமி தரப்பினர், ஏழு லட்சம் பிரமாண பத்திரங்கள் அனுப்பினர். ஆனால் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்த பின், நாங்கள் அனைவரும் சேர்ந்து சசிகலாவைஆதரிக்கவில்லை. என கூறி, மீண்டும் லட்சக்கணக்கில்பிரமாண பத்திரங்களை அனுப்பி வைத்தனர்.
ஒரு சில நிர்வாகிகள் ஒரு அணிகளுக்கு அதரவாகவும் ஆவணங்களை தாக்கல் செய்து குழப்பினர். இப்படி, ஒவ்வொருவரும், நான்கு முறை, தங்கள் நிலைகளை மாற்றி மாற்றி, பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து, பல்டி அடித்தால் தேர்தல் ஆணையமோ குழப்பிப் போய் மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சொன்ன வழியில் இபிஎஸ் அணிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என்றே பேசப்படுகிறது.
ஆனால் விடாக்கொண்டன் டி.டி.வி.தினகரன் அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் இதை உச்சநிதிமன்றத்துக்கு எடுத்துக் செல்லவும் தயங்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.
இதுபோன்ற குழப்பங்கள் இல்லை. ஆனாலும், 'பெரும்பான்மை பலம் என்ற அடிப்படையில், பழனிசாமி, பன்னீர் தரப்பினருக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்' என, ஒரு கருத்து தொடர்ந்து நிலவுகிறது.
எது எப்படியோ ? இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு இப்பவோ ? அப்பவோ? வரும் என்பதால் ஒரு தரப்பு தொண்டர்களும் திக்.. திக்....மன நிலையில் உள்ளனர்.