
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர்., முரசொலி ஆகிவிட்டது. ஜெயா தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சியாக மாறிவிட்டது... என்று விமர்சனம் செய்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், துரைமுருகன் பேட்டியை ஒளிபரப்பியதே அவர்களது திமுக சார்பை வெளிப்படுத்துகிறது என்று பொருமித் தள்ளினார்.
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர்., முரசொலி ஆகிவிட்டது. ஜெயா தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சியாக மாறிவிட்டது.
வாழ்நாளில் எங்களுக்கு எதிரி யார்...? தலைவர் எம்ஜிஆர்., காலத்தில் இருந்து, அம்மா காலம் வரை எங்களுக்குச் சொல்லிச் சொல்லி ஊட்டி வளர்த்து வந்தது, திமுக.,வும், திமுக, தலைவரும். அவர்களை எந்தக் காலத்திலும் நாங்கள் ஏற்றுக் கொண்டதே இல்லை.
அப்படிப் பட்டவர்களை, அம்மா கஷ்டப்பட்டு ஆரம்பித்த, நம் அம்மா டிவியில்... அதாவது ஜெயா டிவியில்., அம்மாவுடைய சேலையைப் பிடித்து இழுத்து, சட்டமன்றத்தில் அம்மாவை மானபங்கப் படுத்திய துரை முருகனை அழைத்து அந்த டிவியில் பேட்டி காண்கிறார்கள் என்று சொன்னால், இதை விட பெரிய சாட்சி உலகி வேறு எதுவுமே இருக்க முடியாது.
திமுக.,வுடன் அவர்கள் எந்த அளவுக்கு கை கோத்திருக்கின்றார்கள், அம்மாவுக்கு விரோதமான காரியங்களைச் செய்வதில், முதலாவதாக இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். துரைமுருகன் பேட்டியை ஒளிபரப்பியதே அவர்களது திமுக சார்பை வெளிப்படுத்துகிறது என்று காட்டமாகக் கூறினார் ஜெயக்குமார்.