
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இன்று தீர்ப்பு வெளியாக 80% வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அவரது தலைமையில் தனி அணி செயல்பட்டது.
அப்போது, சசிகலாவின் அணியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலாவின் அணி சார்பில் தினகரனும் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிட்டனர். அப்போது, இருதரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி ஆதரவாளர்களும் இணைந்து சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். எனினும் தினகரனுக்கும் கட்சியின் நிர்வாகிகள் சிலர், எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் ஆதரவு உள்ளதால், ஓபிஎஸ்-இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என 2 அணிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு, சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இரட்டை இலை வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் அணி தரப்பிலும் கோரப்பட்டது.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவை நவம்பர் 10-ம் தேதி வரை நீட்டித்த உச்சநீதிமன்றம், அதற்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், பழனிசாமி மற்றும் தினகரன் அணி சார்பில் பிரமாணப் பத்திரங்களும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்பிறகு இருதரப்பின் வாதங்களும் எழுத்துப்பூர்வ வாதங்களும் தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கப்பட்டன. இருதரப்பின் விரிவான வாதங்களையும் முழுவதுமாக கேட்டறிந்த தேர்தல் ஆணையம், தீர்ப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இருதரப்பின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் தீர்ப்பின் வரைவை தயாரித்து அவற்றை சரிபார்க்கும் பணியையும் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதிமுக கட்சி யாருக்கு என்பதும் எது வலிமை பெற்ற அணி என்பதும் தீர்மானிக்கப்படும் என்பதால், தீர்ப்பு யாருக்கு எதிராக வழங்கப்படுகிறதோ, அந்த அணி கண்டிப்பாக நீதிமன்றத்தை நாடும்.
இரட்டை இலை சின்னம் தீர்ப்பு எந்த அணிக்கு எதிராக வழங்கப்படுகிறதோ, அந்த அணி டெல்லி உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ கண்டிப்பாக மேல்முறையீடு செய்யும். அப்படியாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும்போது, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு மிகவும் தெளிவானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் தீர்ப்பில் எந்த தவறும் இருக்கக்கூடாது என்பதிலும் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
எனவே வரைவு தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்து சரிபார்த்து மிகத்தெளிவான தீர்ப்பை வெளியிடும் எனவும் 300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக இருக்கும் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பான முடிவை அறிவிக்க கால தாமதம் ஆகியுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட 80% வாய்ப்புள்ளதாகவும் ஒருவேளை இன்று வெளியிடப்படாவிட்டால், நாளை கண்டிப்பாக தீர்ப்பு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.