
அதிமுகவின் ஒ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் வெகு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒ.பி.எஸ் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல பிரிவுகள் காணப்படுகின்றன. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டி காத்து வந்த நற்பெயர்களை சசிகலா தனது பதவி ஆசைக்காக சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக ஆட்சி பன்னீர்செல்வத்தின் கைக்கு வந்தது. ஆனால் அப்போதும் ஒ.பி.எஸ்ஸின் ஆட்சி திறம்படவே செயல்பட்டு வந்தது.
இதை பொறுக்க முடியாத சசிகலா முதலில் பொதுச்செயலாளர் ஆனார். பின்னர், முதல்வர் பதவிக்கும் அடிகோலிட்டார்.
இதனால் ஒ.பி.எஸ்ஸை வலுகட்டாயமாக பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் சசிகலா. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் எப்படியாவது முதல்வர் சீட்டில் உட்கார்ந்து விட வேண்டும் என்ற நோக்கில் சசிகலா செயல்பட்டு வந்தார். அவரது கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை சொத்து குவிப்பு வழக்கு அவரின் பதவி ஆசைக்கு ஆப்பு வைத்தது.
இதில் சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கபட்டிருந்த சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை துணைபொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார்.
மேலும் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியையும் நியமித்தார். இதனால் எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து சிறைக்கு சென்ற சசிகலாவை அமைச்சர்கள் சென்று பார்த்து வந்தாலும் குற்றவாளியை முதலமைச்சர் சந்திக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி நிலையாக நின்றார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்து வந்த திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார் எடப்பாடி.
இதனிடையே பதவி ஆசை யாரை விட்டது என்பதற்கு ஏற்ப ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் நிற்பேன் என தினகரன் ஒற்றை காலில் நின்றார். மறுப்பு சொல்ல முடியாத அமைச்சர்களும் ஒத்து ஊதினர்.
அதிலும் சரிவர செயல்படாததால் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே சசிகலாவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க தினகரன் எடப்படியையும் விட்டு வைக்கவில்லை. பன்னீர்செல்வத்திற்கு சசிகலா கொடுத்த அதே நெருக்கடியை தினகரன் எடப்பாடிக்கு கொடுத்து வருகிறாராம்.
மேலும் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி உள்ளார். அனால் அதற்கும் தினகரன் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி மூத்த அமைச்சர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். மேலும் சசிகலா, தினகரனை ஓரம் கட்டி அதிமுகவையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளன.
இதுதொடர்பாக இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
ஓபிஎஸ் அணியில் கேபி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அணியில் தம்பிதுரை, வைத்திலிங்கம், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஒ.பி.எஸ் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.