அமைச்சரான பிறகும் போஸ்டர் ஒட்டியாகவே இருக்கிறார்... - ராஜேந்திர பாலாஜியை வறுத்தெடுத்த வைகை செல்வன்!

First Published Jun 26, 2017, 5:54 PM IST
Highlights
ADMK spoke person Vaikaiselvan attacked Minister rajendra balaji


ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்கள் அனைவரும் ஊமையாகவே இருந்தனர். அதனால், ஜெயலலிதாவின் குரலை தவிர வேறு யாருடைய குரலும் வெளியில் தெரியாமல் இருந்தது.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அனைவருக்கும் பேச்சு வந்து விட்டதால், கட்சி ஒற்றுமையை கூட காற்றில் பறக்க விட்டு, பலரும் பேசக் கூடாதவற்றை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வரிசையில், பாலில் ரசாயன கலப்படம் இருப்பதாக சொல்லிவிட்டு, அதை நிரூபிக்க தவறியதால், அதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலகவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, 500 ரூபாய் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் பேசும் அரசியல் விபச்சாரி வைகைச் செல்வன் என்று கூறினார்.

மேலும், தம் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியே வைகைச்செல்வனை இப்படிப் பேச வைத்திருக்கிறது. 500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர்தான் இந்த வைகைச் செல்வன் என்றார்.

ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகை செல்வன், தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் தெருத் தெருவாக கொண்டு திரிந்த ராஜேந்திர பாலாஜி சினிமாத்துறைக்கே அமைச்சராகியிருக்கிறார்.

அமைச்சரானதை மறந்து இன்னும் போஸ்டர் ஒட்டியாகவே இருக்க ராஜேந்திர பாலாஜி நினைக்கிறார். சேற்றிடம் இருந்து சந்தனத்தை எதிர்பார்க்க முடியாது.

அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த விருதுநகர் மாவட்டத்தை திமுகவிற்கு தாரை வார்த்தவர் ராஜேந்திர பாலாஜி. தகுதி இல்லாத ராஜேந்திர பாலாஜியுடன் சண்டையிட விரும்பாததால் அவரை மன்னித்துவிடுவதாக கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், வைகை செல்வனுக்கு நடந்த பனிப்போரில் அதிமுக பல இடங்களில் தோல்வி அடைந்தது. வைகை செல்வன் தோல்வி அடைவதற்கும் ராஜேந்திர பாலாஜியே காரணம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், வைகை செல்வனுக்கு இடையே எழுந்துள்ள வெளிப்படையான மோதல், அதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

click me!