கடைசி நேரத்தில் ஆதரவு கேட்ட அதிமுக... கூட்டணியில் வேண்டாத கட்சியாகிறதா பாஜக?

By Asianet TamilFirst Published Oct 5, 2019, 7:25 AM IST
Highlights

வேலூர் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆதரவை கோராமலும் அவர்களை பிரசாரத்துக்கு அழைக்காமலும் ஒதுக்கி வைத்து தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. இந்த முறை நீண்ட இழுபறிக்கு பிறகுதான்  பாஜகவின் ஆதரவை அதிமுக கோரியுள்ளது. இதன்மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக வேண்டாத கட்சியாக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 நீண்ட இழுபறிக்கு பிறகு இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை அதிமுக கோரிய நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிகவுக்கு தரும் முக்கியத்துவத்தை பாஜகவுக்கு தருவதில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. பாமகவுக்கு மாநிலங்களவை வழங்கியதால், அவர்கள் தானாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்   தேமுதிக, தமாகா, சமகவின் ஆதரவை அதிமுக கோரியது. குறிப்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கோரினார்கள்.
ஆனால், பாஜகவிடம் மட்டும் ஆதரவு கோரப்படப்படவில்லை. ஒரு கட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றும் “எங்களுடைய ஆதரவை அதிமுக கோரவில்லை” என்றும் இருவேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அறிவித்தபோதும், தங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என தமிழக பாஜக முறுக்கிக்கொண்டிருந்தது.  இதனையடுத்து சென்னை வந்த மோடியிடம், இடைத்தேர்தலில் ஆதரவைக் கோரி இபிஎஸ்-ஓபிஎஸ் கோரியதக தகவல் வெளியானது.


வேலூர் தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தலில் பாஜகவை அதிமுக ஒதுக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் முடிந்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் நிலையில் பாஜகவின் ஆதரவை அதிமுக கோரியிருக்கிறது. அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினார். இந்தச் சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜ தலைவர் இல.கணேசன், பாஜ பொது செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,  “இரண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் ஆதரவு கேட்டு அகில இந்திய தலைமையிடம் அதிமுக பேசியது. அதைதொடர்ந்து எங்களை முறைப்படி சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள். 2 தொகுதிக்கான தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளோம். உள்ளாட்சி தேர்தல் கூட்டணியை அந்த நேரத்தில் தெரிவிப்போம். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவோம்” என்று தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆதரவை கோராமலும் அவர்களை பிரசாரத்துக்கு அழைக்காமலும் ஒதுக்கி வைத்து தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. இந்த முறை நீண்ட இழுபறிக்கு பிறகுதான்  பாஜகவின் ஆதரவை அதிமுக கோரியுள்ளது. இதன்மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக வேண்டாத கட்சியாக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

click me!