
அதிமுக - பாஜக கூட்டணியில் இடப்பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தான அனைத்து பகுதிகளிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பாஜக 20% இடங்களில் போட்டியிட இடங்களைக் கேட்பதாகவும் இருப்பினும் அதிமுக அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இது சற்றே அதிமுக அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இடப்பங்கீட்டில் அதிமுக பாஜக இடையே தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இப்போது வெளியிட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி, தர்மபுரி, விழுப்புரம் நகராட்சிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அதேபோல நகராட்சிகளை பொறுத்தவரைச் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வார்டுகள், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகள், விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள், திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகள், விழுப்புரம் நகராட்சி 42 வார்டுகள், திண்டிவனம் நகராட்சி 33 வார்டுகள், தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.