தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. 70 ஆயிரம் பேருடன் ஐ.டி. விங் படை.. திமுகவுக்கு போட்டியாக அதிமுகவின் மெகா ஐடியா!

By Asianet TamilFirst Published Aug 13, 2020, 8:59 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவில் 70 ஆயிரம் பேர் கொண்ட தகவல் தொழில்நுட்ப அணி (ஐ.டி. விங்) தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.

கட்சிகளின் தேர்தல் பிரசார களங்களில் ஒன்றாகிவிட்டது சமூக ஊடகங்கள். சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகும் செய்திகளுக்கு ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் தர வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் புழங்குவதால், அவர்களை வளைக்கவும் கட்சிகள் சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், சமூக ஊடகங்களில் திமுக - அதிமுக - பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.


ஆளும் அதிமுகவில் சில மாதங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது கட்சித் தலைமை. முக்கிய எதிர்க்கட்சியான திமுக ஐ.டி. விங் சமூக ஊடகங்களில் பலமாக உள்ளது. மேலும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்குடன் திமுக இணைந்துள்ளதால், சமூக ஊடகங்களில் நினைத்த விஷயங்களை அவர்களால் டிரெண்ட் செய்ய முடிகிறது. அது சார்ந்த விஷயங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது.
இந்நிலையில் திமுகவுக்குப் போட்டியாக அதிமுகவும் ஐ.டி.விங்கை பலப்படுத்த முடிவு செய்து, நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது மண்டலம், மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி வரை ஐ.டி. விங்கிற்கு நிர்வாகிகளை நியமிக்க கட்சியினரை தேர்வு செய்துவருகிறது அதிமுக. மாநில அளவில் சுமார் 70 ஆயிரம் பேருடன் ஐ.டி. விங்கை கட்டமைத்துவருகிறது அதிமுக. எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையிலும் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லும் வகையிலும் இவர்களைப் பார்த்து பார்த்து தயார் செய்துவருகிறது அதிமுக தலைமை. குறிப்பாக தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் இவர்களுடைய பணி இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்காக ஒவ்வொரு மண்டல செயலாளர்களின் கீழும் 13 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இதேபோல ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஐ.டி. விங்கில் 14 நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்கள் வரை ஐ.டி. விங்கை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக அதிமுகவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஐ.டி. விங்கும் கட்சியின் மூத்த நிர்வாகியோடு தொடர்பில் இருப்பது போலவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அதிமுகவுக்காக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றிவரும் சுனில் டீமும் 70 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாகப் பயிற்சி அளித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த 70 ஆயிரம் பேரும் ஐ.டி. விங்கில் நியமிக்கப்பட்டவுடன் சமூக ஊடங்களில் தங்கள் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.டி. விங் நியமன பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் முழுவீச்சோடும் பலத்தோடும் அதிமுக ஐ.டி. விங் செயல்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

click me!