அதிமுக ஆட்சிக்கு பாமகதான் காரணம் என்ற அன்புமணி பேச்சு... கப்சிப்பான அதிமுக... ஜெயலலிதா இருந்திருந்தால்...?

By Asianet TamilFirst Published Jan 2, 2020, 10:27 AM IST
Highlights

“பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்த்திய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம். உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அடைய போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் தடுக்க முடியுமா என்பதை யோசித்துப் பேசுங்கள்” என்று சட்டப்பேரவையில் தேமுதிகவுக்கு எதிராக ஜெயலலிதா பேசியதும் அதற்கு விஜயகாந்த் பதில் அளித்ததும் வெகு பிரசித்தம் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
 

அதிமுக தற்போது ஆட்சியில் இருப்பதற்கு பாமகதான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு அதிமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தப் பதிலும் தராமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
புத்தாண்டையொட்டி விழுப்புரத்தில் பாமக சார்பில் சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசியதுதான் தற்போது அரசியலில் ஹாட் டாக்.  “நாடாளுமன்றத் தேர்தலின்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. தங்களுடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அவர்கள் (அதிமுக) சொன்னார்கள். அனைத்தையும்  நாம் விட்டுகொடுத்தோம். அன்று அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காமல் போயிருந்தால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. ஆனால், இன்றோ நாம் உள்ளாட்சித் தேர்தலில் அரை சீட், கால் சீட்டுக்கான நம்மை கெஞ்ச வைக்கிறார்கள்.” என்று அன்புமணி பேசியது பாமக, அதிமுக வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அன்புமணி ஏன் பேசினார் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் கேள்வி. அதிமுக தங்களுக்கு உரிய கவுரவத்தைத் தரவில்லை என்று பாமக கருதியிருந்தால், அப்போதே எல்லா இடங்களிலும் தனித்து போட்டி என்று அறிவித்திருக்கமாலே என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் வைக்கப்படுகிறது. அதிமுகவை எச்சரிக்கும் வகையில் அன்புமணி பேசியதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு காலமே முழுமையாக இருப்பதால், அப்போது கணிசமாக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதாலும் அன்புமணி பேசியதாக பாமக வட்டாரங்களில் இதற்குக் காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி பேசியுள்ள போதிலும் அதிமுக தரப்பில் அதற்கு எந்தப் பதிலும் இதுவரை தராதது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கூட்டணி கட்சிகள் முரண்டு பிடித்தால், அதற்கெல்லாம் ஜெயலலிதா அசராமல் அதிரடியாகப் பதில் அளிப்பது வழக்கம். அதிமுகவுடன் மோதல் போக்கை தேமுதிக கடைபிடித்தபோது, சட்டப்பேரவையிலேயே எதிராகப் பேசி அதிரடித்தார் ஜெயலலிதா. 
“பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்த்திய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம். உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அடைய போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் தடுக்க முடியுமா என்பதை யோசித்துப் பேசுங்கள்” என்று சட்டப்பேரவையில் தேமுதிகவுக்கு எதிராக ஜெயலலிதா பேசியதும் அதற்கு விஜயகாந்த் பதில் அளித்ததும் வெகு பிரசித்தம் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.


இப்போது ஜெயலலிதா ஏற்படுத்தி தந்த ஆட்சி இருப்பதற்கு பாமகதான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் பேசிய பிறகும், அதிமுக  தலைமையிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. வழக்கமாக காலை, மாலை என எல்லா வேளைகளிலும் கருத்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்கூட அன்புமணி ராமதாஸ் பாமக பொதுக்குழுவில் பேசியது பற்றி கருத்து எதையும் சொல்லவில்லை. அன்புமணியின் கருத்தை அதிமுக ரசிக்கவில்லை என்றபோதும், அதற்கு சரியான பதிலடிக்கூட அதிமுக தரப்பில் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அதிமுக தொண்டர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி நீடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் அதிமுக தலைமை, அன்புமணிக்கு பதில் தந்து சிக்கலாகிவிடும் என்பதால், அமைதி காப்பதாகும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.


அன்புமணி ராமதாஸ் இந்தப் பேச்சுக்கு பிறகு அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, “தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அதற்குள் என்னென்ன வியூகங்கள், முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதை பொருத்திருந்து பாருங்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார். உண்மைதான், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில் அதிமுக - பாமக கூட்டணி எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

click me!