7வது நாளாக நாடாளுமன்றத்தை நாக்கு தள்ளவைத்த அதிமுக எம்பிக்கள்!! எதற்கும் அசராத பாஜக

First Published Mar 13, 2018, 12:03 PM IST
Highlights
admk mps protest in parliament in seventh day


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 7வது நாளாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6 நாட்களாக அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. 

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் தமிழக அரசு அதிருப்தி அடைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை முறைப்படுத்த ஒரு திட்டம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளதால் அதை சுட்டிக்காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வருவதும் மத்திய பாஜக அரசின், தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், 7வது நாளாக இன்றும் அதிமுக எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்பிறகு அவை தொடங்கியதும், வழக்கம்போல கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் தொடர்ச்சியாக முடக்கப்பட்டாலும் அதற்கெல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
 

click me!