அவை நடந்தால் தானே நம்பிக்கை வாக்கெடுப்பு..? மெர்சல் காட்டும் அதிமுக எம்பிக்கள்

First Published Mar 19, 2018, 1:28 PM IST
Highlights
admk mps continuously protest in parliament


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை நாடாளுமன்றம் முடக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உறுதியாக தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை மேலாண்மை செய்ய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வாக்கியம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்பதை காரணம் காட்டி மத்திய அரசு தட்டி கழித்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், நாடாளுமன்றத்தை 10 நாட்களாக முடக்கினர். இந்நிலையில், இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, 11வது நாளாக இன்றும் நாடாளுமன்ற அவைகளை முடக்கினர். 

இதற்கிடையே, தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அவை தொடர்ச்சியாக முடக்கப்படுவதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், இன்று அவையை முடக்கியபிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தெலுங்குதேசம் சார்பில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அவையை நடத்தவிட்டால் தானே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்குவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை எந்த அலுவல்களும் நடக்காது என உறுதிபட தெரிவித்தார்.

இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது.
 

click me!