அதிமுக அமைச்சரின் நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு... அதிரடி காட்டும் வருமான வரித்துறை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 02, 2021, 07:40 PM IST
அதிமுக அமைச்சரின் நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு... அதிரடி காட்டும் வருமான வரித்துறை...!

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

​தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதலே சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக்(அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. கரூர் ராமேஸ்வரம் பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் காலை 11மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அரவக்குறிச்சி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தாய், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு, ராயனூரில் திமுக மேற்கு நகர செயலாளார் தாரணி சரவணன், செந்தில் பாலாஜி ஆதரவாளர் கொங்கு மெஸ் சுப்ரமணி ஆகியோரது வீடுகளிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. 

திருவண்ணமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேவனாம்பட்டியில் உள்ள வீட்டில் பறக்கும் படை சோதனை நடத்தி வந்த நிலையில், வருமான வரித்துறையினரும் ரெய்டு நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து எதிர்க்கட்சியினர் மீது மத்திய அரசு ரெய்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. வருமான வரித்துறையை எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக மத்திய அரசு பயன்படுவதாகவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகார்களை அடுத்து 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!