அதிமுக ஆட்சி தானாக கவிழப்போகுது... எப்படித் தெரியுமா..? மு.க. ஸ்டாலின் சொன்ன கணக்கு!

By Asianet TamilFirst Published Jun 4, 2019, 7:45 AM IST
Highlights

இப்போது ஆட்சி வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சிக்கு ஒன்றரை வருடம் தான் ஆயுள். அதன்பிறகு மீண்டும் மக்களை போய் சந்திக்க வேண்டும். அடுத்த ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் இருக்க கூடிய நிலை ஏற்படும். 

அதிமுக ஆட்சி தானாக கவிழக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது:

 
சென்ற ஆண்டு கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை திருவாரூரில் கொண்டாடினோம். அப்போது நான், ‘அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற தலைவர் அவர்களே, உங்களது சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள்’ என்றேன். கருணாநிதி தந்தார். அந்தப் பாதி சக்தியைப் பெற்றுதான் 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனையைப் படைத்துள்ளோம். இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுத்துள்ளோம். இதற்கு காரணம், கருணாநிதியின் சக்தி தான். 
இந்தத் தேர்தலோடு திமுக கதை முடிய போகிறது. திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் இதுதான். ஸ்டாலின் கனவில் மிதக்கிறார் என்றெல்லாம் பெரிய தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால், தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பு,  அவர்களுடிய கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.


இப்போது அடுத்து, திமுக வென்றதால் என்ன பயன்; திமுக அணி வெற்றி பெற்று என்ன சாதிக்க போகிறது என்கிறார்கள். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் வளர போராடுவோம். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல் மொழியாக போராடுவோம். கச்சத்தீவை மீட்க போராடுவோம். மரண தண்டனையை ரத்து செய்ய போராடுவோம். இந்தப் போராட்ட குணத்தை என்றைக்கும் திமுக கைவிடாது. 
திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்க வேண்டு. அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது பணி என்ன என்பதை மாதம் ஒருமுறை  அறிக்கையாக என்னிடம் அளிக்க வேண்டும். இதைச் சரியாக செய்தால் அடுத்து நம்முடைய ஆட்சி தான். இப்போது ஆட்சி வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சிக்கு ஒன்றரை வருடம் தான் ஆயுள். அதன்பிறகு மீண்டும் மக்களை போய் சந்திக்க வேண்டும். 
அடுத்த ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் இருக்க கூடிய நிலை ஏற்படும். சில பத்திரிக்கைள் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சட்டப்பேரவையில் கோட்டை விட்டது என்று எழுதுகிறார்கள். திருவாரூரை தவிர்த்து பார்த்தால் 12 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறோம். 22 இடங்களில் அதிமுக 12 இடங்களை பறிகொடுத்திருக்கிறது. இது தான் இன்றைய நிலை. திமுகவுக்கு மட்டும் 101 எம்எல்ஏக்கள் உள்ளனர். தமிழக வரலாற்றில் இது உண்டா?


இங்கு இருக்கக் கூடியவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீதான வழக்கு தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. அது வருகிறபோது இந்த ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது கேள்விக்குறி. தானாக கவிழக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

click me!