கூட்டுறவு சங்க தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றிபெற முயற்சிக்கிறது அதிமுக அரசு - டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு...

First Published Mar 30, 2018, 9:00 AM IST
Highlights
admk government try to win shortcut in Co operative society union election - TRP Raja MLA


திருவாரூர்

கூட்டுறவு சங்க தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றிபெற அதிமுக அரசு முயற்சி செய்கிறது என்று டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "நடந்து கொண்டிருக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அராஜகம், ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளை குழிதோண்டி புதைப்பதாகவே அமைந்துள்ளது. 

நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்பதே உண்மை. 

இதனைத் தெரிந்து கொண்டுதான் ஆளும் கட்சியினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகார துஷ்பிரயோகம் செய்து நேர்மையான அதிகாரிகளை மிரட்டி பணிய வைத்து தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு அதன்மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற அ.தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது.

இவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க அரசின் செய்லபாடுகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களிலும் முறைகேடுகள் நடக்கின்றன. குறிப்பாக கீழநத்தம், ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை, அய்யம்பேட்டை, மூவர்கோட்டை ஆகிய இடங்களில் எல்லாம் ஆளும் கட்சியினரால் அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டு உள்ளது. 

நேர்மையான முறையில் தேர்தல் நடத்த விரும்பும் அதிகாரிகளை மிரட்டி அவர்களை தவறான செயல்களில் ஈடுபட வைக்க ஆளும் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் அது எந்தவிதத்திலும் நியாயமானதாக இருக்காது. 

இருந்தாலும் தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விழிப்புடன் இருந்து தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை அதிகாரிகள் மீறாமல் இருக்க அறவழியில் நம்மால் முயன்றதை நாம் அனைவரும் சேர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். 

அதேபோல எங்கேனும் முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனுக்குடன் எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுகுறித்து கடந்த 28-ஆம் தேதி தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளும் அ.தி.மு.க. அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகளும் கூடி கூட்டுறவு சங்க தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பது குறித்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். 

இதுகுறித்து அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தொடர்ந்து நியாயமான தேர்தல் நடக்க நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.  

click me!