
ஒட்டுமொத்த அதிமுகவின் அதிகார மையமாக, காட் ஃபாதராக உருவெடுத்துள்ளார் டி.டி.வி தினகரன்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் சசிகலாவுக்கு முக்கிய ஆலோசனைகளை சொல்லி வந்தவர் டி.டி.வி தினகரன். உட்கட்சி எதிரிகளை சமாதனம் செய்து அனைவரையும் வழிக்கு கொண்டு வந்ததில் டி.டி.விக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
இயல்பாகவே சாந்தமான சுபாவம் கொண்ட தினகரன் அதிர்ந்து பேசாதவர். சந்தர்ப்ப சூழ்நிலைகள் புரிந்து சாதூர்யமாக செயல்படக்கூடியவர் என்பதால் தனது அன்பும் பாசத்திற்குரிய தம்பி திவாகரனை விட, அரசியலில் ஒருபடி மேலே தினகரனை வைத்திருந்தார் சசிகலா.
பெரியகுளம் எம்.பியாக இருந்தபோதிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு பெற்று வந்தார்.
இப்படி அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி இருந்த தினகரன் தற்போது அதிமுகவின் மிகப்பெரிய அதிகார மையமாக மாறியிருக்கிறார். தனது அக்கா மகனான தினகரனின் பக்குவமான அணுகுமுறை, சிக்கல்களை கையாளும் முறை ஆகியவற்றால் சசிகலாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்புதான் இந்த அளவுக்கு தினகரன் வளர காரணம்.
இதுவரை இல்லாத ஒரு பதவியை உருவாக்கி அவருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளார் சசிகலா. சசிகலா இல்லாத நேரத்தில் கட்சியை நடத்தும் அதிகாரத்தை அதிகார பூர்வமாக பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி ஆட்சியையும் அமைச்சர்களையும் கட்டுபடுத்தும் சக்தியும் தினகரன்தான்.
அதனால் தான் கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரை உள்ள சசிகலா ஆதரவு அதிமுக நிர்வாகிகள் தினகரன் கடைக்கண் பார்வை பட வேண்டும் என தவியாய் தவிக்கிறார்கள்