DMK Vs ADMK | அதிமுக மாஜி எம்.பி.யை தட்டித் தூக்கிய திமுக... கோவையில் அதிமுகவை திணறடிக்கும் திமுக..!

By Asianet TamilFirst Published Dec 14, 2021, 10:46 PM IST
Highlights

கோவை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன். எதிர்காலத்தில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கவும் தமிழ் வளரவும் முதல்வருடன் இணைந்து பாடுபடுவேன். இனி ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்.

வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை நீட்டி காட்டுபவர்தான் இந்தியாவின் பிரதமர், ஜனாதிபதியாக இருப்பார்கள் என்று அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னால் எம்.பி. கோவை நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அ.ம.மு.க, த.மா.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் கோவையைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் முன்னாள் எம்.பி.யுமான நாகராஜனும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக சார்பாக 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோயமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர்தான் நாகராஜன். திமுக, பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாகராஜன் வெற்றி பெற்றார். 

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியிலும் வெல்லாத நிலையில், அந்த மாவட்டத்தில் திமுகவை தலைமை பலப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் முழு வெற்றி பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜி பம்பரமாக சுழன்று வருகிறார். இந்நிலையில் கோவை முன்னாள் எம்.பி. திமுகவில் இணைந்துள்ளார். இணைப்பு விழாவுக்குப் பிறகு கோவை நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாகராஜன் கூறுகையில், “கோவை மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்ற தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். நான் கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாற பணியாற்றுவேன். ராமருக்கு அணில் போல கோவை மாவட்டத்தில் திமுகவுக்குப் பணியாற்ற முதல்வருக்கு துணையாய் நிற்பேன். கோவை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன். எதிர்காலத்தில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கவும் தமிழ் வளரவும் முதல்வருடன் இணைந்து பாடுபடுவேன். இனி ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள். கருணாநிதி எப்படி தன்னுடைய ஆளுமைமிக்க அரசியலால் இந்தியாவின் பிரதமர்களை தன் கைவிரல்களில் வைத்திருந்தாரோ, அதுபோல் வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை நீட்டி காட்டுபவர்தான் இந்தியாவின் பிரதமர், ஜனாதிபதியாக இருப்பார்கள்” என்று கோவை நாகராஜன் தெரிவித்தார். 
 

click me!