அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா..!! அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2020, 11:56 AM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்  வேகமாக பரவிவரும் நிலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல முக்கிய அரசியல்  புள்ளிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து 14-வது தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின்  மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், முன்னாள் சமூகநலத்துறை அமைச்சராகவும் பதிவி வகித்தார். தற்போது அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் உள்ளார். இவரின் அரசியல் பயணம் எம்ஜிஆர் காலத்திலிருந்தே துவங்கியது ஆகும். முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பெண் அமைச்சராக இருந்தார். அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான இவர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிகத் துணிச்சலுடன் எதிர்க்கும் ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், அதிமுகவில் செல்வாக்கு மிகுந்த செயல் தலைவராகவும் வலம் வருபவர் ஆவார். 

தற்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக  இருந்து வருகிறார்,  இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக முக்கிய  புள்ளியான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அதிமுகவைப் பொறுத்தவரையில் ஒரு அமைச்சர் உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!