என்.எல்.சி மூன்றாம் சுரங்கம்..திமுக அமைச்சர் மீது குற்றச்சாட்டு..அறிக்கை வெளியிட்ட எடப்பாடியார்..

By Thanalakshmi VFirst Published Jan 23, 2022, 7:16 PM IST
Highlights

புதிதாக துவங்கவுள்ள என்.எல்.சியின் மூன்றாம் சுரங்கத்திற்கு இழப்பீட்டு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,என்‌.எல்‌.சி.  நிறுவனம்‌ தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில்‌ சுமார்‌ 12,500 ஏக்கர்‌ நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள்‌, கடலூர்‌ மாவட்டம்‌ புவனகிரி சட்டமன்றத்‌ தொகுதியில்‌ அமைந்துள்ளன. இந்நிலையில்‌ மத்திய அமைச்சர்‌ காணொலி மூலம்‌ 17.4.2022 அன்று என்‌.எல்‌.சி. நிறுவனத்தின்‌ புதிய மறுவாழ்வு மற்றும்‌ மறு குடியமர்வுத்‌ திட்டத்தை அறிவித்துள்ளார்‌. இதன்படி, நிலக்கரி சுரங்கம்‌ அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும்‌ விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம்‌ ரூபாயும்‌, வீட்டு மனைகளுக்கு, ஊரகப்‌ பகுதிகளில்‌ சென்ட்டுக்கு 40,000/- ரூபாயும்‌, நகரப்‌ பகுதிகளில்‌ 75,000/- ரூபாயும்‌ வழங்கப்படும்‌ என்றும்‌, மேலும்‌, மறுகுடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில்‌, 1000 சதுர அடியில்‌ வீடு கட்டித்‌ தரப்படும்‌ என்றும்‌ என்‌.எல்‌.சி. நிறுவனம்‌ அறிவித்துள்ளது. 

மேலும்‌, நிலம்‌ வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும்‌, ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம்‌ ரூபாய்‌ முதல்‌ 15 லட்சம்‌ ரூபாய்‌ வரை வழங்கப்படும்‌ என்றும்‌ என்‌.எல்‌.சி. நிர்வாகம்‌ அறிவித்துள்ளது. என்‌.எல்‌.சி. நிறுவனம்‌, பாதிக்கப்படும்‌ கிராமங்களில்‌ உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின்‌ மக்கள்‌ பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக்‌ கேட்காமல்‌, கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கான புதிய மறுவாழ்வு மற்றும்‌ மறு குடியமர்வுத்‌ திட்டத்தை ஒருதலைபட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த அறிவிப்பை ஒரு சதவீத மக்கள்கூட ஏற்றுக்கொள்ளத்‌
தயாராக இல்லை.

1956-ஆம்‌ ஆண்டு துவங்கப்பட்ட என்‌.எல்‌.சி. நிறுவத்தின்‌ ஆண்டு வருமானம்‌ இன்று சுமார்‌ 12 ஆயிரம்‌ கோடி ரூபாயாக உள்ளது. 1977-89 காலக்கட்டத்தில்‌ நிலம்‌ வழங்கிய குடும்பங்களைச்‌ சேர்ந்த 1,827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அவர்கள்‌ அனைவரும்‌ இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர்‌. இன்றைய தேதியில்‌ சுமார்‌ 11,510 நிரந்தரப்‌ பணியாளர்கள்‌ பணிபுரியும்‌ இந்நிறுவனத்தில்‌, ஆயிரக்கணக்கான ஏக்கர்‌ நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களைச்‌ சேர்ந்த மண்ணின்‌ மைந்தர்கள்‌ எவரும்‌ இன்று பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது, என்‌.எல்‌.சி-க்கு நிலம்‌ வழங்கிய குடும்பங்களைச்‌ சேர்ந்த சுமார்‌ 3,500 நபர்கள்‌ மட்டுமே குறைந்த ஊதியத்தில்‌ ஒப்பந்தத்‌ தொழிலாளர்களாக, தினக்‌ கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்‌.

மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.

புதிதாக துவங்க உள்ள NLC-யின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாமாக வழங்க கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிடுக ! pic.twitter.com/XKCtK142Lq

— AIADMK (@AIADMKOfficial)

ஏற்கெனவே, 2-ஆம்‌ சுரங்கத்திற்காக நிலம்‌ வழங்கியவர்கள்‌, நிலத்தின்‌ மதிப்பை உயர்த்தவும்‌, நிரந்தர வேலை வழங்கக்‌ கோரியும்‌, என்‌.எல்‌.சி. நிறுவனத்திடம்‌ தொடர்ந்து போராடி வருகின்றனர்‌. எனவே நிர்வாகம்‌, நில உரிமையாளர்கள்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அதிகாரிகள்‌ அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின்‌ நில இழப்பீடு மற்றும்‌ நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும்‌ என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும்‌, இதற்கான முழு முயற்சிகளையும்‌ இந்த திமுக அரசு மேற்கொள்ள
வேண்டும்‌ என்று வலியுறுத்துகிறேன்‌.

17:12022 அன்று நடைபெற்ற கூட்டத்தில்‌ கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும்‌, நிர்வாகத்துடன்‌ இணைந்து, கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டமைக்கு, என்‌.எல்‌.சி. நிர்வாகத்திற்கும்‌, இந்த விடியா அரசுக்கும்‌, கூட்டத்தில்‌ கலந்து கொண்ட இரண்டு திமுக அமைச்சர்களுக்கும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பாக எனது கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!