தம்பிதுரை , ஜெயகுமார் கருணாநிதியை சந்தித்தனர் - சின்னம்மா சார்பில் வாழ்த்துவதாக பேட்டி

First Published Dec 17, 2016, 2:36 PM IST
Highlights


மாநிலங்களவை துணைத்தலைவர் தம்பித்துரை  மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

 திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டிரக்யோடமி எனப்படும் தொண்டையில் துளையிட்டு சுவாச கருவியை பொறுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சுவாசப்பிரச்சனை  தீர்ந்து சாதாரண நிலைக்கு வந்தார். நேற்று அவர்   பாட்ஷா படத்தை பார்த்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தி வந்து சந்தித்தார்.

காலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் சந்தித்தார். இந்நிலையில் திடீரென அதிமுக மாநிலங்களவை துணை தலைவர் தன்பிதுரை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இருவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவமனைக்கு வந்த அவரை மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் திமுக தலைவரை சந்திக்க சென்றனர். அவர்களை கனிமொழி சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறியதாவது. அதிமுக சார்பாகவும் , புரட்சித்தலைவிக்கு பிறகு எங்களை எல்லாம் வழி நடத்தக்கூடிய சின்னமா சார்பாகவும் இங்கு வந்து திமுக தலைவர் கலைஞர் அவர்களை மருத்துவமனையில் நலம் விசாரிக்க வந்தோம்.

 

மு.க.ஸ்டாலின் , கனிமொழி மற்றும் கலைஞரின் மனைவியிடம் நலம் விசாரித்தோம். அவர் நலமாக இருப்பதாக சொன்னோம். அதிமுக சார்பாகவும் , எங்களை வழிநடத்தக்கூடிய சின்னம்மா சார்பாகவும் அவர் நலம் பெற வாழ்த்துக்களை சொன்னோம்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

பொதுவாக திமுக தலைவரை அதிமுகவினர் யாரும் கலைஞர் என்று அழைக்க மாட்டார்கள். கருணாநிதி என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முதல் முறையாக அதிமுகவின் முக்கிய நிர்வாகி தம்பிதுரை கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தற்போது அதிமுக தரப்பிலிருந்து இதே போன்று வந்துள்ளது நல்ல அரசியல் நாகரீகம் துளிர் விடுவதை காண முடிகிறது.

click me!