
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ பெண் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகிய மருத்துவ குழுவினரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.
மேலும், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை பிசியோ தெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் தொடர்ந்து நேற்று 3வது நாளாக ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளித்தனர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழுவினரும் 24 மணி நேரமும்முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, நெல்லை தெட்சிணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், செயலாளர் சண்முகவேல் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், துணை தலைவர் ரத்தினராஜ் நாடார், நடிகர் அஜய் ரத்னம் ஆகியோர் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
28வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரின் முன்னேற்றம் குறித்து, அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
மருத்துவ சிகிச்சை ஒரு புறம் தொடர்ந்தாலும், அப்பல்லோ மருத்துவமனையின் வெளியே அ.தி.மு.க.வினரின் பிரார்த்தனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் 20 பேர் நேற்று 2வது நாளாக உணவு உண்ணாமல் வேண்டுதலில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீச்சட்டி எடுப்பதற்காக மாலை அணிந்தபடி அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் நடிகை வாசுகி, பாத்திமா பாபு, ஜெயதேவி ஆகியோர் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில், அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆதி நாராயணன் சிறப்பு பூஜை நடத்தி பிரசாதங்களை அனுப்பிவைத்தார். அந்த பிரசாதத்தை சிவகாசி பக்தர்கள் குழுவை சேர்ந்த தங்க பாண்டியன் மற்றும் ஆலய நிர்வாகிகள் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கொடுத்தார்.
மத்திய மாணவர் படைத்தலைவர் பி.வி.தமிழ் அரசன் தலைமையில் 20 பேர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய போவதாக அறிவித்தனர்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறிகையில், முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெகு விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். முதலமைச்சரின் உடல்நிலை பற்றி பரப்பப்படும் தேவையற்ற வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம்.
தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு தருவார் கள் என்றார்.