
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட தினகரன் 34 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமினில் விடுதலையாகி சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டார்.
அவரிடம் போலீசார் விசாணை நடத்தியபோது அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையை அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை விசாரணை நடத்தினர். பின்னர், ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி தினகரனும், மல்லிகார்ஜூனாவும், டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த தினகரனுக்கு செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 10 எம்எல்ஏக்கள், 5 எம்.பிக்கள், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் டிடிவி தினகரன் தங்கியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்திக்கையில் சென்னை திரும்பியவுடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் எனவும், யாரும் யாருக்கும் பயந்து நடப்பதில்லை எனவும் அனைவருடனும் நட்புடன் இருப்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தற்போது சென்னை விமான நிலையத்தை டிடிவி தினகரன் வந்தடைந்தார்.
அவரை அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நான்ஞ்சில் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.கலைராஜன், கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், ஜக்கையன், கதிர்காமு,. சுபிரமணியன் ஆகிய எம்.எல்.ஏ., க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை சமாளிக்க 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.