
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர் அணி என அதிமுக இரு கூறுகளாக பிரிந்து கிடக்கிறது. அதனால், கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.
எனவே, இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே, இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியும், அடுத்து வரும் தேர்தல்களை தைரியமாக சந்திக்க முடியும் என்பது தெளிவாகி உள்ளது.
இதன் காரணமாகவே, இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பன்னீர் தரப்பினர் விதிக்கும் நிபந்தனைகளை எடப்பாடி தரப்பினர் ஏற்க மறுப்பதால், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தொண்டர்களையும், பொது மக்களையும் வசீகரிக்கும் தலைமை அதிமுகவில் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், சசிகலா எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம், பன்னீருக்கு ஓரளவு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது.
ஆனால், தேர்தல் ஆணையத்தில், சசிகலாவே பொது செயலாளர் என்பதை உறுதி படுத்தும் வகையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.
மறுபக்கம், அதிமுக கட்சி விதிகளின்படி, சசிகலாவின் தேர்வு செல்லாது என்று பன்னீர் தரப்பில், கையெழுத்து வாங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் சிலரும், தொண்டர்கள் பலரும், இரு தரப்பினர் அளித்த பிரமாண பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளனர். இது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தேர்தல் ஆணைய பஞ்சாயத்து இப்போதைக்கு முடிவதற்கு வாய்ப்பில்லை. அதனால், இரட்டை இலை சின்னத்தை உடனடியாக பெறுவதற்கும் வாய்ப்பு இல்லை.
இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே, கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எந்த சிக்கலும் இன்றி பெறமுடியும்.
இது ஒரு புறம் இருக்க, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர், தேவை இல்லாத பேச்சு மற்றும் செயல்கள் மூலம், மறைமுகமாக, அணிகள் இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இதனால் வெறுத்து போன கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள் என பலருக்கும், மாற்று முகாம்களில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
அவர்கள் மத்தியில், ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவர்கள் இல்லாத நிலையில், இரட்டை இலை சின்னமும் இல்லாமல் போனால், கரை ஏறுவது கஷ்டம் என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
எனவே, ஆட்சி இருக்கும் வரையில் வேண்டுமானால், அவர்களை இழுத்து பிடிக்கலாமே ஒழிய, ஆட்சி போய்விட்டால், அவர்களும் போய்விடுவார்கள். இதுதான் இன்றைய அதிமுகவின் உண்மையான கள நிலவரம்.
அதனால், கட்சி கரைந்து போவதற்குள், அணிகளை இணைத்து கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும், மீட்க வேண்டும் என்பதே, அதிமுக தொண்டர்களின் புலம்பலாக இருக்கிறது.