விவசாயியைவிட ஐ.பி.எல். முக்கியமா? தோனி, ரோகித் சர்மா உருவ பொம்மைகளை எரித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

First Published Apr 8, 2018, 11:57 AM IST
Highlights
ADMK cadres protest against IPL


விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா? என்றும், காவிரி மேலாண் வாரியம் அமைத்த பின்னரே சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்றும் புதுச்சேரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் வலுத்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தி வருகிறார். திருச்சி, முக்கொம்புவில் தொடங்கிய இந்த நடைபயணம் இன்று கடலூரில் முடிவடைகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே அதிமுக கட்சி கொடியுடன் திரண்டனர்.

அப்போது அவர்க,ள ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தக்கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பின்னரே சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். 

விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா? என்று கேட்டு கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

click me!