அதிமுகவுடன் தமாகா கூட்டணி !! வாசன் கேட்கும் இரண்டு மாநகராட்சிகள் என்னென்ன தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Nov 16, 2019, 9:50 PM IST
Highlights

எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் திருப்பூர் மற்றும் ஆவடி மாநகராட்சிகளை அதிமுகவிடம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்கள் வெற்றிக்குப் பிறகு தைரியமாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கலாம் என எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது,

அதே நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தங்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதாக  ஜி.கே.வாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே அதிமுக கூட்டணியிலுள்ள பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களது கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்கள் குறித்து அதிமுகவுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். தேமுதிக இதற்காக சுதீஷ் தலைமையில் ஒரு குழுவே அமைத்துள்ளது.

இந்நிலையில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் 2 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தமாகாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதிமுகவிடம் ஜி.கே.வாசன் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் திருப்பூரையும், ஆவடியில் ஏற்கனவே தமாகா நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய வகையில் ஆவடியையும் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜாவுக்காக ஈரோடு மாநகராட்சியை கேட்கவும் ஒரு மூவ் நடந்துகொண்டிருக்கிறது. மொத்தம் இரண்டு கேட்கிறோம். அதில் திருப்பூர், ஆவடி, ஈரோடு ஆகியவை பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

click me!