
திருப்பத்தூரில் மாடுமுட்டி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு உரிய நிவாரண தொகையும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்துள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் ஜோலார்பேட்டை அடுத்துள்ள கம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பீடி தொழிலாளி தவ்லத் என்பவரின் மகன் முஷ்ரப் என்ற 19 வயது இளைஞர் மாடு முட்டி மரணமடைந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை பீடி தொழிலாளியின் குடும்பத்தை இளைஞர் மரணமடைந்துள்ளதால் அவரது குடும்பம் ஆதவற்ற நிலையில் உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மாடு முட்டி மரணமடைந்துள்ள இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகையும் அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோருகிறேன். அதேபோல், மரணமடைந்த அந்த இளைஞர் காவல்துறையினரால் தாக்கியதால் தான் மரணமடைந்தார் என்ற வதந்தி பரப்பப்பட்டு அதில் கோபமடைந்தவர்கள் சிலர் அப்பகுதியில் காவல்துறையை எதிர்த்துள்ளனர்.
இதனால் அங்கு அசம்பாவிதம் நடைபெற்றதால் அதை தொடந்து 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவன் உட்பட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க வதந்திகளால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி காவல்துறை விடுவிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.