
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா - ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் பதவிக்கு ஓ.பி.எஸ். அணியினரும், சசிகலா அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில், ஓ.பி.எஸ். அணியில் முன்னாள் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், 11 எம்எல்ஏக்கள், 10 எம்பிக்கள் உள்ளனர். மேலும், தற்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவிர, கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், சசிகலா அணியில் உள்ள சில எம்எல்ஏக்கள், மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாகவும், விரைவில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பழம்பெரும் நடிகையும், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் நாயகியாக பல படங்களில் நடத்தவரும், ஜெயலலிதாவின் தோழியுமான லதா, இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார்.
அங்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு, தனது ஆதரவை தெரிவித்து, தனது வாழ்த்துகளை கூறினார். மேலும், ஆதரவாளர்களை திரட்டுவது, தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு, மக்களிடம் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் நிலைமையை எடுத்துரைப்பது உள்பட பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது.