அரசியல் வேண்டவே வேண்டாம்... முழுக்குப் போடுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி அறிவிப்பு

By Asianet TamilFirst Published May 6, 2019, 9:16 PM IST
Highlights

சினிமாவைவிட அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் கடைசியாக கிடைத்திருக்கிறார்கள். என்னால், நாள் முழுவதும் நடித்துக்கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. 
 

பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் அரசியலுக்கு முழுக்குப்போடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்தார். மாநில தலைவர் தமிழிசைக்கும் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோதும் கட்சியிலிருந்து விலகவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் படிப்பு தொடர்பாக கிளம்பிய சர்ச்சையை வைத்து நடிகை குஷ்புடன் ட்விட்டரில் வாக்குவாதம் செய்தார். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு அவரை அழைக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் ட்விட்டரில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டுவந்தார்.


இந்நிலையில் அரசியலிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெறும் வாக்குவாதமும் மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல மாறிவிட்டது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்துவிட்டது. அதற்காக வருத்தப்படுகிறேன். சினிமாவைவிட அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் கடைசியாக கிடைத்திருக்கிறார்கள். என்னால், நாள் முழுவதும் நடித்துக்கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. 
இப்போதைக்கு அரசியலை இன்னும் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். அரசியலில் தீவிரமான இறங்க இது நேரல் இல்லை. இப்போதைக்கு நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

click me!