
மனித கழிவுகளை அள்ள தனியாக கருவி ஒன்று கண்டுபிடிக்க வேண்டும்; இல்லை என்றால், ஒவ்வொரு ஜாதியினரும், ஒவ்வொரு வாரமும் கழிவு நீர்
தொட்டியில் இறங்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் போதும், உடனே மனித கழிவுகளை அள்ளுவதற்கு கருவி கண்டுபிடித்து விடுவார்கள் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
நடிகர் சத்யராஜ், கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர். திரைப்படங்களில்
வில்லனாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாகவும், அதன் பின்னர் தயாரிப்பாளராகவும் அவர் உருவெடுத்தார்.
கொங்கு தமிழ் பேசி, தனக்கென தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். என் கேரக்டரே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே, என்ன மா... கண்ணு,.
தகடு தகடு என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமே புரட்சி செய்பவர்களுக்கு மத்தியில், நிஜத்திலும் புரட்சி செய்து வாழ்ந்து வருகிறார் சத்யராஜ். பெரியாரைப் பின்பற்றும் அவர்,
ஜாதியையும், சமூக அவலங்கள் குறித்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், துப்புரவாளர்களுக்காகவும் அவர்களின் வாழ்வுக்காகவும் சத்யராஜ், தனது புரட்சிகர கருத்தை தெரிவித்துள்ளார். இன்னும் மனித
கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை இருந்து வருவதாக கூறினார். மோஷன் பரிசோதனைக்காக மலத்தை எடுப்பதற்கே தயங்குகிறோம்
அல்லவா? ஆனால், ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் இன்னும் அப்படியே அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இதற்கு இன்னும் கருவி கூட கண்டுபிடிக்கவில்லை. இதற்கு உடனடி தீர்வு எது என்றால், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு ஜாதியினரும் கழிவு தொட்டில்
இறங்க வேண்டும் என்று ஒரு அவசரம் சட்டம் போட்டால் போதும். உடனே மனித கழிவுகளை அள்ளுவதற்கு தனியாக கருவி ஒன்று கண்டுபிடித்து
விடுவார்கள் என்றார்.